Friday, 30 January 2015

மறைக்கும் திரை: கதைசொல்லிகளின் இன்றைய நெருக்கடி

வெகுஜன தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களுக்கு இன்றைய காலத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மாறுபட்ட, புதிய கதைகளை எப்படி உருவாக்குவது, சொல்லுவது என்பது தான்.
சங்கரின் 'ஐ' படம் பார்த்த பிறகு இந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது.
எல்லா ஆக்ககர்த்தாக்களுக்கும் ஏற்படக் கூடிய ஒரு நெருக்கடி தான் இது.
படைப்பு மனத்தில் எப்போதும் மையச் சரடாக ஒருசில எண்ணங்கள், படிமங்கள் சுழன்றபடியே இருக்கும்.
சாதுரியமான கதைசொல்லிகள் அப்படி ஒரு இழையை எடுத்துக் கொண்டு அதன்மீது வெவ்வேறு வண்ணங்களையும் கலவைகளும் பூசிப் பூசிப் புதிது புனைய முனைவார்கள்.
வெற்றிமாறனின் 'பொல்லாதவ'னும் 'ஆடுகள'மும் நல்ல உதாரணங்கள். இரண்டுமே பெருவெற்றி பெற்ற படங்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இரண்டு படங்களதும் மையக்கதை-கரு ஒன்று தான். 'பொல்லாதவ'னில் வந்த உந்துருளி (மோட்டார் சைக்கிள்) 'ஆடுகள'த்தில் சேவலாக மாற்றப் பட்டிருக்கும். பொல்லாதவனின் தடயம் சற்றும் தெரியாதபடி ஆடுகளத்தின் கதைச்சூழல், களம், பேசுமொழி முதலானவை நகரத்தில் இருந்து கிராமத்துக்கு மாற்றப்பட்டிருக்கும். இந்த ரசவாத வித்தையைச் செய்வதற்கு அநாயசமான திறன் வேண்டும்.
ஆனால், இதே செயலை ஓர் எல்லையைத் தாண்டி மிதமிஞ்சிச் செய்யப் போனால் அந்தப் படங்கள் முன்னைய படங்களின் கார்ட்டூன் நகல்களாக caricature ஆக எஞ்சிவிடக் கூடிய அபாயம் உண்டு.
'நாயகன்', 'தளபதி' எடுத்த பிறகு மணிரத்தினம் 'ராவணன்' எடுக்கப் போனது அத்தகைய எத்தனம் என்றே எனக்குப் பட்டது.
கதைக்கரு என்று பார்க்கப் போனால் சங்கர் இதுவரை எடுத்த படங்களில் பெரும்பாலானவற்றை இரண்டு வகைப்பாடுகளுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கிறேன்.
1) தன்னைவிட ஏதோ ஒரு படிநிலையில் மேலே எட்டாக்கனியாக இருக்கும் பெண் மீது காதலுறும் ஆணும் அவளை அடைவதற்கான அவனுடைய அக-புறப் போராட்டங்களும்: காதலன், அந்நியன், ஐ, boys, எந்திரன்
2) ஊழல் கட்டமைப்பு மீதான நடுத்தர வர்க்க மனிதனின் கோபம்: ஜெண்டில்மன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி
வாழ்க்கையின் சுழற்சியில் இரண்டு மனிதர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நண்பனாகவும் எதிரியாகவும் உணர்ந்து கொள்ள முடியும் என்ற சுவாரசியமான அகமுரணை எடுத்துக் கொண்டு மணிரத்னம் புனைந்தெடுத்த கதைகளின் பட்டியல் நீளமானது:
அக்கினி நட்சத்திரம், தளபதி, இருவர், ராவணன், கடல், ஆயுத எழுத்து
சமூக அடுக்கில் கீழே இருக்கும் ஒருவன், நிர்ணயிக்கப்பட்ட விதிகளை உடைத்து மேலே வருவது என்ற கருவை வைத்து எடுக்கப்பட்ட படங்கள்:
நாயகன், தளபதி, ராவணன், குரு
இப்போது எழுந்திருக்கும் புதிய அலையில் இளம் இயக்குனர்கள் கொஞ்சம் வித்தியாசமான கதைகளோடு அறிமுகமாகிறார்கள். ஆனால் நின்று நிலைப்பதற்கு அவர்களும் இதே சவாலை எதிர்கொண்டாக வேண்டும்.