Saturday, 22 November 2014

ஒரு துறையாக ஈழத்து சினிமா வளரவில்லை – லெனின் எம். சிவம்


தொடர்புடைய மற்றொரு பதிவு

A Gun and A Ring திரைப்படத்தின் இயக்குனர் லெனின் எம் சிவத்துடனான இந்த நேர்காணல் லண்டனில் வைத்துப் பெறப்பட்ட்து. லண்டனில் சனக்கூட்டம் நிறைந்த இரண்டு அரங்குகளில் A Gun and A Ring படம் திரையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.


கேள்வி:

தமிழ் சினிமா என்றில்லை.. பொதுவாகத் தமிழ்ப் படைப்பு வெளி என்று எடுத்துக் கொண்டாலே, பலரும் பேசத் தயங்குகின்ற பல விடயங்களை இந்தத் திரைப்படத்தில்தொட்டிருக்கிறீர்கள்.. படத்தின் கதைக்களங்கள் அனைத்திலும் பேசாப் பொருளைப் பேசத் துணிகிற ஒரு பண்பு வெளிப்படுகிறது (பட விமர்சனம் பார்க்க). இது பிரக்ஞாபூர்வமாக நடந்தஒன்றா? அல்லது கதையை எழுதிச் செல்லும்போது தானாக அமைந்த ஒன்றா? இந்தக் கதை இத்தனை அடுக்குகளோடு எப்படி உருவானது?

லெனின் எம். சிவம்:

இது கதை எழுதிச் செல்லும்போது தானாக அமைந்த ஒன்றுதான்.

(சனல் 4 இன்) 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தைப் பார்த்த வேளை, அது என்னை வெகுவாகப் பாதித்தது. யுத்தத்தின் போது ஏகப்பட்ட அட்டூழியங்கள் நிகழ்ந்தன என்பதை அறிந்திருந்தேன். ஆனால் அதைக் காட்சிகளாகப் பார்த்தபோது சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்தேன்யுத்தம் இவ்வளவு மிலேச்சத்தனமானதா என்று எண்ண வைத்தன அந்தக் காட்சிகள். இந்த யுத்தத்தோடு வளர்ந்த ஒருவனாக இருந்து கொண்டு, கடந்த முப்பது ஆண்டுகளாக இதை நான் உணராததையிட்டு வெட்கப்பட்டேன். ஏதோவொரு வகையில் இதற்கு நானும் பொறுப்புக் கூற வேண்டியவன் என்பதாக உணர்ந்தேன்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்த கொடுமைகளை நினைத்துப் பார்த்தேன். வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பெண்கள்.. தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே செல்லடி வாங்கிய குழந்தை.. தாய் இறந்தது தெரியாமல் தாயின் மார்பில் பால் தேடும் பிள்ளை என்று என்னவிதமான வாழ்க்கையை இந்த யுத்தம் எங்களிடம் முடிவாகத் தந்துவிட்டுப் போயிருக்கிறது என்ற கேள்வி என்னை வெகுவாகப் பாதித்தது.

இந்த யுத்தத்தின் கொடூரத்தையும் எம்மீது அது ஏற்படுத்திய பாதிப்பையும் செல்லவேண்டும் என்று உணர்ந்தேன்.  அதை உண்மையாகச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். 

இவ்வாறு பேசப்படவேண்டிய விடயங்கள் என் மனதில் தோன்றத் தோன்ற உண்டான மனச்சீற்றத்திலிருந்தே இந்தக் கதைக்கரு உருவாக ஆரம்பித்தது.கேள்வி: ஒருவகையில், நான், நீங்கள் உள்ளடங்கலான ஒட்டு மொத்தச் சமூகத்தின் மீதும் முன்வைக்கப்பட்ட ஒரு விமர்சனமாக இந்தப் படத்தைக் கருதலாம் என்று தோன்றுகிறது. இந்தத்திரைப்படம் புலம்பெயர் தமிழர் வாழும் தேசங்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களின் எதிர்வினை என்ன விதமாக இருக்கிறது? திரைப்படத்தினூடாக நீங்கள்முன்வைத்திருக்கும் விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

லெ.சி: 
இதை நான் ஒட்டு மொத்தச் சமூகத்தின் மீதும் முன்வைக்கப்பட்ட ஒரு விமர்சனமாக பார்க்கவில்லை.  உண்மையை அப்படியே பேசவேண்டும் என்றதன் விளைவு அவ்வாறாகத் தோன்றலாம். 

உண்மையில் நான் சற்றுப் பதற்றத்துடன் இருந்தேன்.. டொரொன்டோவில் தான் முதன்முறையாக இதைத் திரையிட்டுக் காட்டினோம்.. பேசப்படப்படாத பல விடயங்களை இந்தப் படம் பேசியபடியால் எம்மக்கள் மத்தியில் எவ்வாறான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்று சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் படத்துக்குக் கிடைத்த எதிர்வினை அற்புதமானது. என்னைப் பாதித்திருந்த உணர்ச்சிகள் பார்வையாளர்களையும் பாதித்திருந்தன என்பதைக் கண்டேன். நான் நினைக்காத அளவுக்கு வரவேற்புக் கிட்டியிருந்தது.


கேள்வி: கதையின் நுட்பமான இழைகளை பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்களோ என்ற ஐயத்தாலும் அவநம்பிக்கையாலும் அட்சரம் அட்சரமாகக் கதையை விரித்துச் சொல்கிற ஒருபண்பையே நாம் அறிந்த தமிழ் சினிமாவில் கண்டிருக்கிறோம். இந்தப் படத்தில் அப்படி இல்லை. இதிலுள்ள ஆறு விதமான கதைக்களங்களிலும் பார்வையாளர்கள் தாமாக மீதிக்கதையை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. படத்தைப் பார்ப்பவர்கள் கதையை முழுதுமாகப் புரிந்து கொள்வார்களா என்ற தயக்கம் உங்களுக்கு இருந்ததா?

லெ.சி:

மிக நல்ல கேள்வி. உண்மையாகவே எனக்கு ஒருவித தயக்கம் இருந்தது. திரும்பத் திரும்பத் தென்னிந்திய சினிமாவுக்குள் மூழ்குபவர்கள் நாங்கள். வாழைப்பழத்தை உரித்துத் தொண்டைக்குள் திணிப்பதைப் போல கதை சொல்லும் வழக்கம்தான் பெரும்பாலான தென்னிந்திய படங்களில் இருக்கிறது.  அப்படி கதைசொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கதையை வேண்டுமென்று சிக்கலானதாக ஆக்கவில்லை. இதன் தேவை அப்படி. ஓரிரு விடயங்கள் பார்வையாளர்களின் கவனத்திலிருந்து தப்பினாலும், ஒட்டுமொத்தக் கதையை உள்வாங்குவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது சிலவேளை சிக்கலானதாக இருக்கலாம். நமது மக்களுக்கு இது அந்நியமான ஒன்றாக இருக்காது. எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அது நமது புறங்கையைப் பார்ப்பது போலவே இருக்கும். இது நமது கதை நமது களம். அத்தோடு எப்போதும் பார்வையாளர்களை மதிப்பவன் நான். நான் ஒருவன் தான் புத்திசாதுர்யமானவன் என்று நினைப்பதில்லை.

கேள்வி:

துவக்கு, மோதிரம் என்ற இரண்டு பொருள்களை மையச் சரடாக வைத்துக் கொண்டு ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகத் தோன்றும் நிகழ்வுகளை இணைத்துக் கதைசொல்லியிருக்கிறீர்கள். 'சுவாரசியம்' என்ற அம்சம் தான் இதில் பிரதானமானதாகப் படுகிறது. இந்த ஸ்கிரிப்டை உருவாக்கிய பின்னணியைச் சொல்லுங்கள்..?

லெ.சி

கதையின் 'தீம்' எனக்குத் தெரிந்திருந்தது. அதைச் சார்ந்த கதாப்பாத்திரங்கள் உருவாகத் தொடங்கின. அவர்களின் கதைகளைச் சொல்லிக் கொண்டு போகும் போது அதற்குள் ஒரு மோதிரம் வரத் தொடங்கியது. பிறகு ஒரு துவக்கு. இரண்டும் தனித்தனியாக உருவானவை. இவற்றை முதலில் தொடுத்து இணைக்கத் தொடங்கினேன். பிறகு கதாப்பாத்திரங்களை ஒன்றோடு ஒன்று தொடுத்தேன்.கேள்வி:

திரைக்கதை அமைக்கும்போது அதனது சுவாரசியத்தன்மை எவ்வளவு தூரம் இயல்பாக, organic ஆக வருகிறது? அல்லது அதைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு தூரம் பாடுபடவேண்டியிருக்கிறது?

லெ.சி: 
என்னைப் பொறுத்தவரை கதையில் சுவாரசியம் என்பது முக்கியமானது. எனது முதல் திரைப்படமான 1999 ஐப் பார்த்தீர்கள் என்றாலும் அந்த அம்சம் அதில் இருக்கும். திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தை நீங்கள் நன்றாக அறிந்து கொண்டீர்கள் என்றால் பிறகு சுவாரசியத்தன்மை organic ஆக உருவாகும். இந்தப் படத்தில் 'இரும்பன்' பாத்திரத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அவர் இனியில்லையென்ற ஒரு பிறவிக் கொலைகாரர். அப்படி இருந்து விட்டு பிறகு புலம்பெயர் தேசத்தில் தனது இயல்புக்கு ஒத்து வராத ஒரு வாழ்க்கையை 20 ஆண்டுகளாக நடத்திக் கொண்டு போவார். அப்படி இருக்கும்போது அவரது மகன் இறந்து விடுகிறான். மனைவி மனம் குழம்பிப் போகிறார். இப்படியான ஒரு புள்ளியில், அவருக்கு விடுதலை கொடுப்பது போல அவரது கடந்த காலத்திலிருந்து ஒரு மனிதன் வருகிறான். எனவே அந்த தீம், அந்தப் பாத்திரத்தின் களம் தெரிந்ததும், பிறகு கதையின் நிகழ்வுகளை இணைக்கலாம். சில பகுதிகள் தொய்வாகத் தென்பட்டால், அவற்றை சுவாரசியமாக்குவதற்கு சில சம்பவங்களை உருவாக்க வேண்டி வரலாம்.

கேள்வி:

இந்தப் படத்தின் உரையாடல்கள் (Dialogues) பற்றிக் கொஞ்சம் பேசலாம். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு சார்ந்த இயல்பான ஒரு திரைமொழி இதில் இருக்கிறது. இதேவேளை, தற்போது திரைப்பட முயற்சிகளில் ஈடுபடும் ஈழத்தவர்களில் ஒரு சாரார், தமிழகப் பார்வையாளர்களுக்குப் புரியக் கூடிய வகையில் வசனங்கள் அமைக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார்கள். இது குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன?

லெ.சி
இந்த மொழிப் பிரச்சினையை தேவையற்ற ஒரு குழப்பமாகத்தான் நான் பார்க்கிறேன். ஏனோ தெரியாது இது மிகப்பெரிய குழப்பமாக ஈழத்துத் திரைப்படக் கலைஞர்களிடம் இருக்கின்றது.  என்னைப்பொறுத்தவரை எனது கதாபாத்திரம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தால் அவர் யாழ்ப்பாண தமிழில் பேசினாலே அது சரியாக இருக்கும். இதற்க்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது.  சிலர் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு எமது தமிழ் புரியாது என்றும் அதற்காக கதாபாத்திரங்களை தாம் தென்னிந்திய திரைப்படத் தமிழில் பேசவைக்கிறோம் என்கிறார்கள்.  என்னைப்பொறுத்தவரை இதற்காக எனது கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மையை நான் இழக்கத் தயாரில்லை.

கேள்வி: ஈழத் தமிழர்களின் திரைப்பட உருவாக்க முயற்சிகள் என்று வருகிறபோது, அதில் உள்ள மிக முக்கியமான சவால் என்ன?

லெ.சி:
எமக்கென்று ஒரு துறைஇண்டஸ்ட்ரி இல்லாதது தான் பிரதானமான பிரச்சனை. ஒரு திரைப்படம் பலரது கூட்டு உழைப்பின் மூலம் உருவாகிறது. இயக்குனராக எனது வகிபாகம் பிரதானமானதாக இருக்கலாம். ஆனால் எழுத்துப் பிரதியை எழுதுவதோடு எனது தனிப்பட்ட வேலை முடிந்து விடுகிறது. மீதி வேலைகள் அனைத்திலும் ஏனையவர்களை இணைத்துக் கொண்டே செய்ய வேண்டியிருக்கும். எனவே என்னுடைய எண்ணங்கள், அனுபவம் எல்லாவற்றுக்கும் பொருந்தி வருகிற ஐந்தாறு பேர் கூட வேலை செய்கிறபோதே அதை முன்னகர்த்திக் கொண்டு போக முடியும். திரைப்படத் துறை என்று ஒன்றிருந்தால் அப்படியானவர்களை இலகுவாகக் கண்டெடுக்க முடியும்நடிகர்களாயிருந்தால் என்ன, தொழினுட்பவியலாளர்களாயிருந்தால் என்ன.. என்னுடைய வேலை இலகுவாகி விடும். நமக்குத் தற்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், இப்படியான ஒரு செயல்திட்டத்தில் பங்கெடுப்பவர்களுக்கு நீங்கள் அதிகப்படியான தூண்டுதலை வழங்க வேண்டியிருக்கிறது. இது தான் கடினமான பகுதி. இண்டஸ்ட்ரி என்றிருந்தால் அவரவர் தத்தமது வேலைகளைக் கவனித்துக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். அப்படியில்லாமல் திரைப்படம் ஒன்றை உருவாக்கும்போது, நீங்கள் அதிகப்படியான பிரயத்தனத்துடன் இயங்க வேண்டியிருக்கிறதுநடிகர் தேர்வு, பிறகு அவர்களுக்கான பயிற்சி, வழிகாட்டுதல் முதலான விடயங்களில்.

(நன்றி: ஞாயிறு தினக்குரல், எதுவரை இணைய இதழ்)