Friday, 21 November 2014

நேரம் என்பது


0
நேரம் என்பது
ஒருவழிப் பாதையில் ஊரும் எறும்பு
பரிதிக் கனியைத்
துளைத்து நகர்கிறது


நேரம் என்பது
காளி தீட்டும் கண்மைத் திரளிலிருந்து
சிதறித் தெறித்த சிறுதுளி
உறையும் கரையும்
ஒழுகி மறையும்

2
நேரம் என்பது
கூனல் கிழவியின் ஊனக் கண்வழி
ஊசி கொண்டு ஒட்டித் தைக்கப்படும்
கிழிந்த கந்தை
நாசித் துளைகளில் தூசிக் கமறல்

3
நேரம் என்பது
நூலேணித் தொலைவில் தொங்கும் நிலவு
சிலபடி ஏறப் பலபடி சறுக்கும்

4
நேரம் என்பது
மோப்பக் குழையும் அனிச்சம்

5
நேரம் என்பது
சட்டைப்பைகளில் தேடித் துழாவிச்
சேர்த்த பின்னும்
இன்னும் குறைகிற
ஒற்றை ரூபா

6
நேரம் என்பது
சாவின் புன்னகை
கண்டம் பற்றிய உமையின் கைகள்
தளர்ந்து விலக
நெஞ்சுக் குழிக்குள் மெல்ல இறங்கும்
ஆலகாலம்

7
நேரம் என்பது
ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்த
அக்கினிக் குஞ்சு

8
நேரம் என்பது
அண்டம் தாவும் அசுரப் பட்சியின்
இறக்கை ஸ்பரிசம்

9
நேரம் என்பது
நாளையின் மழலை பதிக்கும்
இன்றின் கால்தடம்


(July 2014)