Tuesday, 7 January 2014

கொல்லும் கோலா - கொக்கா கோலா பிரியர்கள் படிக்க வேண்டியது

நான் கொக்காகோலா முதலான பானங்களைப் பருகுவதை நிறுத்திப் பல ஆண்டுகளாகின்றன. காரணங்கள் பலவகைப் பட்டவை – கொக்காகோலா முதலான பல்தேசியப் பகராசுர நிறுவனங்களின்பால் (Multinational companies) – இலாபமீட்டும் நோக்கில் அவர்கள் கட்டவிழ்த்துவிடும் சுரண்டலின்பால் - இருக்கும் எதிர்ப்புணர்வை ஒன்றாகச் சொன்னால் எல்லா இடத்திலும்அரசியல் சரித்தன்மையோடுதான் இருக்கிறோமா என்ற கேள்வி மனதைக் குடைந்து குற்ற உணர்வைக் கிளப்பி விடும் (தவிரவும், நாட்டில் புரட்சியாளர்களுக்குப் பஞ்சமா என்ன!!).

அதனால், உடல் ஆரோக்கியம் சார்ந்த கரிசனையைப் பிரதானமாகச் சொல்லாம் என்று நினைக்கிறேன்.

நான் அறிந்த நண்பர்கள் பலருக்கும் கொக்கா கோலா முதலான குளிர்பானங்கள் தான் விருப்பத் தெரிவு. அப்பேர்ப்பட்டவர்களைக் கருத்தில் கொண்டுதான் இந்தக் குறும்பதிவு - சற்று முன்னதாக நான் பார்த்த யூட்யூப் வீடியோ தொடர்பானது.  

புகைத்தலுக்கும் நுரையீரல் புற்று நோய்க்குமிடையிலான தொடர்பு 1970களில் மருத்துவ ஆராய்ச்சிகள் வழியாக நிறுவப்பட்டதிலிருந்து, வளர்முக நாடுகளில் சிகரெட் விற்பனை கணிசமாகக் குறைவடைந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிகரெட் விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பரப்புரைகளைப் போலவே அண்மைக் காலங்களில் மேற்குலக நாடுகளில், சர்க்கரை/சீனி அளவு அதிகமாகக் காணப்படும் குளிர்பானங்களுக்கு எதிரான குரல்கள் வலுத்துள்ளன.

அவற்றில் பிரதானமானது கொக்காகோலா நிறுவனத்தின் தயாரிப்புகள்.இவற்றிலுள்ள மிதமிஞ்சிய சர்க்கரை/சீனி அளவு காரணமாக Obesity எனப்படும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை, நீரிழிவு நோய் முதலானவை பாரதூரமாகப் பெருகி வருவது கண்டறியப்பட்டதை அடுத்து tobacco உற்பத்திப் பொருட்களைப் போலவே இத்தகைய பானங்கள் மீதும் அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேலே உள்ள BBC நேர்காணலில், Jeremy Paxman  எழுப்பும் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார் கொக்கா கோலாவின் ஐரோப்பியக் குழுமத் தலைவர் James Quincey.

சினமா அரங்குகளில் விற்பனைக்கிருக்கும் கொக்காகோலா Super size பானத்தில் சுமார் 44 சஷே பக்கற்றுகள் அளவுள்ள சர்க்கரை/சீனி இருப்பதைச் சுட்டிக்காட்டும் Jeremy Paxman, இதைப் பருகுபவர்களுக்கு அந்தத் தகவல் கொக்காகோலாவால் எந்த விதத்திலும் உணர்த்தப்படுவதில்லை என்பதை ஒரு குற்றச்சாட்டாக வைக்கும்போது திண்டாடிப் போகிறார் James Quincey.