Saturday, 4 January 2014

ஏ.ஆர்.ரஹ்மான்: புயலொடு தென்றலைப் புணர்த்தும் வித்தை


‘திருடா திருடா' படத்தில் வரும் ‘தீ தீ தித்திக்கும் தீ’ பாடல் உருவான கதையை அண்மையில் விஜய் டீவியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் சொல்லியிருந்தார்.

பாடல் வரிகள் இசைக்கப்படும் மிருதுவான lullaby melody மாத்திரமே அந்தப் பாட்டுக்காக முதலில் தயார் செய்யப்பட்டிருந்ததாம் – ‘தகிட தாங்கு தா’ என்று தொடங்கும் குருதி நாளங்களைச் சுண்டி இழுக்கக் கூடிய ஆரம்ப விரைஇசை அப்போது சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

விளம்பரம் ஒன்றுக்காக ரஹ்மானால் உருவாக்கப்பட்டிருந்த அந்தத் தனிப் பகுதியை இயக்குனர் மணிரத்னம் எதேச்சையாகக் கேட்க நேர்ந்தபோது, இரண்டையும் கலந்து பாடலை உருவாக்கிப் பார்க்கலாமே என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்.

அது சரியாக வருமா என்ற சந்தேகம் முதலில் தனக்கு இருந்தாலும் பிறகு அவ்வாறே பாடலை உருவாக்கியதாகக் கூறுகிறார் ஏ.ஆர்.ஆர். 

அப்படியாக, வேகமாகத் தொடங்கிப் பின்னர் மிருதுவாகக் கிறங்கி மறுபடியும் மூர்க்கத்துக்கு ஏறும் விநோத இசைக் கலவைகளால் அந்தப் பாடல் உருப்பெற்றது. அதில் மெல்லசைவுகளோடு வரிகள் பாடப்படும்போது பின்னணியில் எந்தவொரு வாத்தியமும் பேரோசை எழுப்பி இடையூறு செய்யாது. ஆனால் அவை அல்லாத இடைப்பட்ட பகுதிகளை இசைக்கருவிகள் சரமாரியாக ஆக்கிரமித்திருக்கும்.

இசையின் இத்தகைய தாவல்களுக்கு அமைவாகக் காட்சிப்படுத்தலில் தனது கமெராவையும் லாவகங்களோடு சுழற்றியிருப்பார் பி.சி.ஸ்ரீராம். நடன அமைப்பு, காட்சி அமைப்பு, பாவனைகள், எடிட்டிங் எல்லாம் கச்சிதமாகப் பொருந்தி வந்ததில் இன்று வரை அந்தப் பாட்டு புத்துணர்ச்சியோடு இருக்கிறது.

கீழைத்தேய மரபுசார் இசைக்கோலங்களோடு இலத்திரனியல் இசையொலிகளை அநாயசமாகக் கலக்கின்ற ரஹ்மானின் நேர்த்தி தான் அவரது தனித்தன்மை என்பது பலராலும் சொல்லப்படுவது தான்.  

ஆனாலும், மேற்சொன்ன பாணியில் – அதாவது பாடல் வரிகள் மெல்லிசையாக ஒலித்துக் கொண்டிருக்க அதற்கு முன்னும் பின்னுமாக வருகின்ற இசைக்கோவைகள் வேறொரு தளத்தில், விரைகதியில் இயங்குகின்ற வண்ணமாக – ரஹ்மானால் உருவாக்கப்பட்ட வேறு பாடல்கள் என்னென்ன என்று நினைத்துப் பார்த்தபோது உடனடியாக நினைவுக்கு வந்தவை இவை. உங்களுக்கு வேறு பாடல் ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்…

'தீ தீ தித்திக்கும் தீ'


'மலர்களே.. மலர்களே..'


'தீண்டாய் மெய் தீண்டாய்..'

(Image courtesy: http://www.arrahman.com)