Friday, 3 January 2014

காமம், கம்பர், வள்ளுவர் - சில குறிப்புகள்

(Facebook இல் பகிர்ந்தவை)

புகைத்தல் பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைப்பவர்கள், இன்றிலிருந்து தாம் புகைக்கப் போவதில்லை என்று பொதுவில் அறிவித்துக் கொள்வதில் ஒரு நன்மை உண்டு என்று சொல்வார்கள் - மற்றவர்களுக்குச் சொல்லி விட்டோமே என்பதற்காகவாவது இயன்றவரை ‘தம்’கட்டி தமது உறுதி மொழியைக் காப்பாற்றுவதற்கு அது உதவி செய்யக்கூடும் என்ற நோக்கில்.

முன்னைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகம் வாசிக்க வேண்டும் என்று - வழமை போலவே - எனக்குள் நானே எடுத்துக்கொண்ட உறுதித் தீர்மானத்தை இம்முறை முகநூலில் ஒரு ‘ஸ்டேட்டஸ்’ ஆகப் போட்டுக் கொண்டதும் அப்படியான ஒரு எண்ணத்தில்தான். (சொன்னதைச் செய்யா விட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிய ‘சொரணை’ நமக்கெல்லாம் கொஞ்சம் குறைவு என்ற போதிலும் கூட :) ). கூடவே, பென்னம் பெரிய இலக்குகளை நிர்ணயித்து விட்டு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்ற உணர்வால் அவதியுறுவதை விட, சின்னத் தாவல்களோடு ஆரம்பிப்போம் என்றும் நினைத்துக் கொண்டேன்.

அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று நாட்களிலும் எனது உறுதிமொழிக்கு விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பதில் ஒரு குட்டித் திருப்தி (நாளாந்தம் கம்பராமாயணம் 10 பாடல்கள், திருக்குறளிலிருந்து 10 பாக்கள், ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதும் மகாபாரதம், ஆங்கிலத்தில் தத்துவ நூல்கள்) . நண்பர்கள் ஸ்ரீ தர்ஷன் மற்றும் ஆதித்தன் கேட்டுக் கொண்டதைப் போல இதுவரையான வாசிப்பில் உண்டான ஒருசில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்தப் பதிவு.

ஜனவரி 1ம் திகதி கம்பரைப் படிக்கத் தொடங்கினேன். கடவுள் வாழ்த்தையும் அவையடக்கத்தையும் கடந்து ஆற்றுப்படலத்தோடு பயணிக்க ஆரம்பித்தபோது தோன்றிய முதலாவது வலுவான எண்ணம் இதுதான்: அதீதமான மொழியுருக்கத்தையும் உணர்வு ஆவேசத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழின் பெருங்கவிகள் பலருக்கும் (ஔவையையும் ஆண்டாளையும் விட்டுப் பார்த்தால் இவர்கள் அனைவரும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்) பெண்கள் பெருஞ்சிக்கலாக இருந்திருக்கிறார்கள்.

கோசல நாட்டின் நதிவளத்தைச் சொல்லப் புகுந்த கம்பர் எழுதுகிறார்:

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம்செலாக்
கோசலம் புனை ஆற்றணி கூறுவாம்

சஞ்சலம் கொள்கின்ற / குற்றம் புரிகின்ற ஐந்து பொறிகளாகிய அம்பும், மணியாரங்கள் ஒலிக்கின்ற மார்புகளுடைய பெண்களின் கண் எனும் போர் அம்பும் நெறி பிறழாத தன்மை கொண்டது கோசலம் (பொதுவில் நெறி வழுவுவதே ஐம்பொறிகளினதும் மாதர் கண்களினதும் தன்மை என்ற மட்டில், அவ்வாறு இல்லாதமை கோசலத்தின் சிறப்பாகிறது); அதனை அழகு செய்கின்ற ஆற்றின் அணியைச் சொல்கிறோம் என்பது அதன் பொருள்.

இன்னோர் இடத்தில் ‘தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன் நிலை நிலாது இறை நின்றது போலவே மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் விலையின் மாதரை ஒத்ததவ் வெள்ளமே’ என்று பாடிச் செல்கிறார். மலையின்கண் உள்ள எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்க்கும்போது மனமொவ்வாமல் சிறுநேரம் உடல் தழுவுகின்ற விலை மாதரது நினைப்பு வந்து விடுகிறது கம்பருக்கு.

கம்பரின் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்த தருணத்தில் உடனடியாக நினைவுக்கு வந்த வேறு இருவர் அருணகிரியும் காளமேகமும். ‘குறமாதைப் புணர்வோனே’ என்று வள்ளியுடனான முருகப் பெருமானின் காதல் லீலைகளைப் பரவசத்தோடு பாடுகின்ற அருணகிரிநாதருக்கு மனிதப் பெண்கள் கலவரம் ஊட்டுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ‘மாதர் கண்ணிடத்திருந்து என்னைக் காவும்’ என்பதே கந்தவேளிடம் அவர் எப்போதும் முன்வைக்கும் இறைஞ்சுதல். பட்டினத்தாரும் இவ்வகையில் பிரசித்தமானவர். இத்தனைக்கும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தேவி உபாசகர்களாக அறியப்படுபவர்கள்.

கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் இவையெல்லாம் ஒருவகை Confessions/concessions ஆகத் தோன்றுகின்றன. உடலும் உயிருமாய்ச் சமைந்து முன்னிற்கும் பெண்மையை வெல்லும் வல்லமை என்னிடம் இல்லை என்பதான ஆண் மனதின் Confession/concession அதனிலும் மேலாகக் கற்பிக்கப்படும் தெய்வமென்ற அரூப சக்தியிடம் முன்வைக்கப்படும் நிகழ்வு போலத் தோன்றுகிறது. இதிலே வெல்லப்பட முடியாத பெண்மை குறித்த வெறுப்புணர்வும் கலந்து கொள்கிறது போலும்.

கம்பராமாயணத்தோடு சேர்த்துப் படிப்பதற்காக எடுத்துக் கொண்ட நூல் திருக்குறள். திருக்குறளைக் காமத்துப் பாலிலிருந்து கற்கத் தொடங்கினேன்.

கவனத்தைத் தொட்ட பல விடயங்கள் இருந்தாலும் ஒன்றை இங்கு சொல்லலாம்.

திருக்குறள் சொல்லும் விழுமியங்கள், அது முன்வைக்கும் கற்பனைகள் அதன் பின் வந்த இலக்கியங்களில் எவ்வாறு மீள்சுழற்றப்பட்டுள்ளன என்பதைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.

காமத்துப் பாலைப் பொறுத்த மட்டில், இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்களில் இருந்து, சளைக்காமல் துரத்தித் துரத்திக் காதலிக்கும் தெருவோர ரோமியோக்கள் வரை வள்ளுவரின் கற்பனையைக் கடன் வாங்குகின்றார்கள் என்பது சுவாரசியம்.

யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால்
நிலன்நோக்கி மெல்ல நகும் (1094)

‘உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே,
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே’

என்பது பழைய எடுத்துக்காட்டு என்றால்,

ஒண்ணுதற் கோஒ உடைந்தது ஞாட்பினுள்
நண்ணாரும் முட்கும் என் பீடு (1088)

பூகம்பம் வந்தால் கூட
பதறாத நெஞ்சம் எனது
பூவொன்று மோதியதாலே
பட்டென்று சரிந்தது இன்று ... (சச்சின்)

என்பது சமீபத்தைய உதாரணம்.

(03.01.2014)