பாரதி: அசைவறு மதியும் ஆசைப் பெருக்கும்


சுப்ரமணிய பாரதியை நாம் மகாகவியாக - பெருங்கவிஞனாக - கொண்டாடுவதற்கு அவனிடம் இருந்த பேராசையும் ஒரு காரணம். பேராசை என்றால் தனது பெயர் மீதான காமம் என்று  (தற்காலத்தின் பெரும்பான்மைத் தமிழ்க் கவிகளைக் கருத்தில் வைத்துப்) பிழையாக அர்த்தம் கொண்டு விடலாகாது.

அது அளப்பரியதை, எல்லை கடந்ததை அணுகி விட வேண்டுமென்ற ஆசை. எல்லையற்றதன் பிரவாகமாகத் தன்னை உணர்வதிலிருந்து கிளர்கின்ற கவித்துவ மிடுக்கு. "பெரிதினும் பெரிது கேள்" என்பான் அவன்.

ஆகப் பெரியது என்று எந்த ஒன்றை வகுத்தாலும், அதனிலும் பெரிது வேண்டும் என்று கேட்பவனின் ஆசை என்னவாக இருக்க முடியும்?

நேற்றைய பொழுது பாரதியின் கவிதை வரி ஒன்றோடு தொடங்கியது. "நல்லதோர் வீணை செய்தே" என்று தொடங்குகிற பாடலில், "அசைவறு மதிகேட்டேன்" என்றொரு விண்ணப்பம் முத்தாய்ப்பாக வரும்.

"அசைவறு மதிகேட்டேன்"

"அசைவறு மதிகேட்டேன்"

பல வேலைகளுக்கு மத்தியிலும் இந்தச் சொற்றொடர் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருந்தது. எதிர்நோக்கி இராதவொரு கணத்தில் பிடரியில் ஒரு மின்னல் தெறித்தது: "ஆகா.. எப்பேர்ப்பட்ட அசுரக் கவிஞன் இவன்"

மஹாசக்தியாக மாறி விட வேண்டுமென்பதே மஹாசக்தியிடம் பாரதி முன்வைக்கும் விண்ணப்பமாக இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சம் முழுதும், அதன் ஒவ்வோர் அணுவும் தொடர்ச்சியான இயக்கத்தில் - ஓய்வற்ற அசைவில் இருக்கிறது; ஒன்று பிறிதொன்றாய் மாறிக் கொண்டிருக்கின்றது என்ற போதம் மிகப் பழையது. தற்கால விஞ்ஞானமும் அதைச் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

பிறப்பினதும் இறப்பினதும் பொருள் அறிய விழைந்த கௌதம புத்தர், எல்லாம் இடையறாமல் மாறிக் கொண்டிருப்பதைக் கண்டார். எமது பௌதீக உடல் தொடங்கி உடனடியாகப் புலனாகாமல் இருக்கின்ற நுண்மனம் வரை எல்லாக் கூறுகளும் சதா மாற்றத்துக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைக் கண்டார். முடிவற்ற அந்த மாற்றத்தைக் குறிக்க பாளி மொழியில் இருக்கும் சொல் "அநிச்ச".

மாற்றம் அற்றிருப்பது போலிருக்கும் மேல் தளத் தோற்றத்தில் இருந்து உள்முகமாகத் திரும்புவதன் மூலம் பிறவிச் சுழற்சிக்கு முற்றுக் காணலாம் என்பதும் புத்த போதம். மனதைச் செம்மை செய்தல், கூர்மைப் படுத்துதல் - பிறகு கூர்ப்பட்ட அந்த மனதையே உபகரணமாகக் கொண்டு எமது பௌதீக உடலின் ஒவ்வோர் அணுவும் ஒவ்வொரு கணமும் அசைந்து கொண்டே இருக்கின்ற மெய்மையை அனுபவபூர்வமாக உணர்தல் என்ற அப்பியாசமே புத்தர் தந்த தியான முறை.

புத்தரின் சமகாலத்தில் கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவ ஞானி ஹெரக்லைடஸ் கூறியதும் ஏறத்தாழ இதை ஒத்தது.

"Everything is in constant flux" - அனைத்தும் மாறாத ஓட்டத்தில் உள்ளது. 'ஒரு ஆற்றில் நீங்கள் இருமுறை இறங்க முடியாது' என்பது ஹெரக்லைடஸ் சொன்னதாகக் கூறப்படும் புகழ்பெற்ற வாக்கியம். ஏனென்றால், அந்தக் கணம் கடந்து விடும். அடுத்த கணம் அது புதியவொரு ஆறு. மாற்றம் அப்பேர்ப்பட்ட வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பது.

சோக்ரடீசுக்கு இந்தக் கோட்பாடு மிகப்பெரும் நெருக்கடியைத் தரும் ஒன்றாக இருந்தது. இதை ஏற்பதென்றால், மொழி, அர்த்தம் என்று எதுவுமே சாத்தியம் இல்லை என்று அவர் கண்டார். எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது என்றால் நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த வரியின் அர்த்தம் இந்தப் பொழுதே மாறிக்கொண்டிருக்கிறது அல்லவா?

'நான்' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடல், மன நுண் துணிக்கைகள் அதீத கதியில் சுழன்று மாறிக் கொண்டிருக்கிறது என்றால், 'நான்' என்பது ஒற்றை 'நான்' தானா? அதனால் குறிக்கப்படுவது என்ன?

'இன்றைய நாம் என்பது நேற்றைய நினைவுகளிலிருந்து உருவாகிறது' என்கிறது தம்மபதம். ஆக, 'நான்'இன் பிறப்பும் இறப்பும் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் Matter என்று சொல்லப்படுகின்ற சடப்பொருள் தான் அனைத்தினதும் உள்ளீடு, அதன் திரிபுகள் தான் மன எண்ணங்கள் என்று வலியுறுத்துகிற பொருள் முதன்மைச் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அல்லது எண்ணம் என்ற ஆக்க சக்தியிலிருந்து தான் அனைத்தும் தோன்றின என்ற கருத்துமுதல் வாதத்தை ஏற்பவராக இருந்தாலும் சரி, இயங்கியலின் விதியில் சடம், மனம் உள்ளிட்ட எல்லாமும் அசைந்து கொண்டிருக்கின்றன என்பதை உய்த்துணர்வதில் தடைகள் இருக்காது என்று நினைக்கிறேன்

அசைந்து கொண்டே இருக்கின்ற ஒன்றை, அந்த ஓட்டத்தில் அள்ளுண்டு போகாமல் வெளியே நின்று கொண்டு கவனிப்பதற்கு, கவனிக்கின்ற அந்தப் பொருள் - அதாவது நமது மனம் - அசைவற்றதாக இருக்க வேண்டும். பலவிதமாகப் பகுக்கப்படக் கூடிய எண்ணங்களின் ஒட்டுமொத்த அரூபக் கூட்டுருவையே நான் இங்கு மனம் என்கிறேன். (மனம், சித்தம், புத்தி முதலாய பகுப்புகள் கீழை மரபிலும் மேல்மனம், ஆழ்மனம் முதலாய பகுப்புகள் மேலை மரபிலும் உள்ளன - அவை எல்லாவற்றையும் சேர்த்துக் குறிக்குமொரு பதமாக மனம் என்பதை இங்கு பயன்படுத்துகிறேன்).

பிரச்சனை என்னவென்றால், அந்த மனமே ஓய்வற்றுச் சுழன்று கொண்டுதானிருக்கிறது. எங்கள் எண்ணங்கள் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவும் வேகத்தை நின்று நிதானித்துக் கவனித்துப் பார்த்தால் தெரியும்.

இமயத்தை இருபுறமாகத் திருகிச் சாய்ப்பதை விடவும், ஏழ்கடலை ஒரே மூச்சில் மொண்டு குடிப்பதை விடவும் சிரமமான காரியம் மனதை இப்படிப் பூச்சியமாகக் கொண்டு வருவது என்பது முயன்று பார்த்தவர்களுக்குத் தெரியும்.

ஒருக்கால் அப்படி முடிந்து விட்டால் -- "அசைவறு மதி" கிட்டி விட்டால்? 'கடவுள்' என்று நாம் கற்பித்துக் கொள்கின்ற ஒன்றின் தன்மை அதுவாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது? என்ற கேள்விக்கு மதங்கள் கூறும் பதில் "அது கடவுளால் படைக்கப்பட்டது" என்பதாக இருக்கிறது. நவீன அறிவியல் Big bang முதலான கோட்பாடுகளைக் கொண்டு அதனை விளக்க முற்படுகிறது.

மனிதர்களுக்குக் கடவுளைப் பற்றிய கருத்துருவம் தோன்றக் காரணம், மனிதர்களாகிய நம்மால் பலவற்றை உருவாக்க முடிகிறது என்பது தான் - எமது படைப்பு எவ்வளவு குறைபாடுகளைக் கொண்டிருக்கக் கூடுமென்றாலும். அந்த உருவாக்கத்தின் பின்னணியில் எமது எண்ணம், பிரக்ஞை இருப்பதாக எமக்குத் தோன்றுகிறது.

உதாரணத்துக்கு ஓர் ஓவியத்தை வரைவதற்கு, அதன் கோடுகள், அவை சார்ந்த கருத்துருவம் முதலில் மனதில் தோன்றியாக வேண்டும்.

மனிதர்களாகிய நாங்கள் படைப்பூக்கம் மிக்கவர்கள் என்றாலும் முடிவின்மை கொண்டவர்கள் அல்ல. மரணம் என்ற நிகழ்வு எமது இயக்கத்தில் குறுக்கிடுகிறது. அதற்கப்பால் என்ன என்பது பற்றி இந்த உடலில் இருக்கின்ற காலத்தில் எவ்வளவு தூரம் அறிய முடியும் என்பது தெளிவாக இல்லை. முடிவற்ற பிரபஞ்சத்தைப் படைக்கிற அளவுக்கு எமது பிரக்ஞை எல்லையற்றதாக இல்லை.

ஆனால், பிரபஞ்சப் பேரியக்கத்தில் அனைத்துமே சுழன்று கொண்டும் அசைந்து கொண்டும் உள்ளன என்றால், திடப்பொருளாக எமக்குத் தோன்றுவதும் நுண் அணுக்களின் அதிவேக ஓட்டத்தை மறைக்கின்ற ஒரு மாயத் தோற்றம் என்றால், இவை அனைத்தினதும் காரணமாக இருக்கின்ற எல்லையற்ற, எல்லாம் வல்ல பிரக்ஞை இந்தச் சுழற்சியில் அள்ளுண்டு போகாத ஒன்றாகத் தானே இருக்க முடியும் - அசைவற்றதாகத் தானே இருக்க முடியும்?

அப்படி ஒரு அதி பிரக்ஞை இருக்கிறதா இல்லையா என்பது வேறு கேள்வி. இருந்தால் அது அசைவற்ற ஒன்றாகவே இருக்க முடியும். அந்த hypothetical பிரக்ஞைக்கு நாம் கொடுத்திருக்கும் பெயர் 'கடவுள்'.

ஆக, "அசைவறு மதி" தா என்று கடவுளிடம் கேட்பது அடிப்படையில் நான் நீயாக வேண்டும் என்று கேட்பது தான். கேட்ட மாத்திரத்திலேயே பாரதிக்குப் புரிந்திருக்க வேண்டும் - உனது இடத்தில் நான் இருந்து கொள்கிறேன் என்று மஹாசக்தியிடம் விடுக்கப்படும் வேண்டுகோளில் இருக்கின்ற விநோதம்.

அதனால்தான் போலும் அடுத்த வரியில் 'உனக்கொன்றும் ஆட்சேபணை இல்லைத் தானே?' என்று உடனடியாகக் கேட்டு விடுகிறான்: இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

உளம் வேண்டிய படிசெலும் உடலும், நசையறு மனமும், நவமெனச் சுடர்தரும் உயிரும் கூட அதீதப் பிரக்ஞையின் பாற்பட்டவை தாம்.

அடிப்படையில் புத்தர் அருளிய தியானத்தைப் பயில்வது என்பது மேற்சொன்ன யாவற்றையும் முயல்வது என்பதாகத் தான் படுகிறது எனக்கு; அதாவது கடவுளைக் கடக்க முயல்தல்.