பிச்சிப் பெண்ணின் காதற் பாடல் - Mad Girl's Love Song


-சில்வியா ப்ளாத் -

 தமிழாக்கம் : தவ சஜிதரன் 

நான் கண்கள் மூட‌
மரித்து வீழும் உலகு யாவும்
என் இமைகள் திறப்ப
வந்து பிறக்கும் அவைதாம் மீண்டும்
(உன்னைப் புனைந்தேன் எந்த‌ன் த‌லையினிற்றான் போலும்!!)

நீலச்சிகப்பில் நட்சத்திரங்கள்
சுழல்நடமாட
எதேச்சையான‌ கருமையும் உட்பாயும்
நான் கண்கள் மூட‌
மரித்து வீழும் உலகு யாவும்

மாயம் செய்தெனை மெத்தையிற் கிடத்தி
மதியொளி மத்தம்மிகும் கானமிசைத்து
பித்தஞ் சுடர முத்தம் இட்டனை எனை நீ
என்றோர் கனாக்கண்டேன்
(உன்னைப் புனைந்தேன் எந்த‌ன் த‌லையினிற்றான் போலும்!!)

விண்ணிருந்து வீழ்வ‌ர் கடவுளர்
நலியும் நரகத் தீயும்
தேவதை, சாத்தான் படையினர் போவ‌ர்
நான் கண்கள் மூட‌
மரித்து வீழும் உலகு யாவும்

சொன்னாற்போல‌ வ‌ருவாய் என்று நினைத்தேன்
ஆனால் நான் முதிருமிக் கால‌ம் உன்பெய‌ர் ம‌ற‌ந்தேன்
(உன்னைப் புனைந்தேன் எந்த‌ன் த‌லையினிற்றான் போலும்!!)

உன்னிலும் ஓர் விண்ண‌திர் ப‌ற‌வையை
நேசித்திருக்க‌லாம்
அவையெனிலோ
இள‌வேனில் வ‌ருங்கால‌ம்
இடியாய் முழ‌ங்கித் திரும்பும் மீண்டும்
நான் கண்கள் மூட‌
மரித்து வீழும் உலகு யாவும்
(உன்னைப் புனைந்தேன் எந்த‌ன் த‌லையினிற்றான் போலும்!!)
1932ம் ஆண்டு பொஸ்டனில் பிறந்த ப்ளாத் தனது முப்பத்தோராவது வயதில் தன்னை மாய்த்துக்கொண்டார்.

உக்கிரப் பிழம்பின் மத்தியிலும் பொன் தாமரை நடப்படுதல் கூடும் என்பது ப்ளாத்தினது கணவரும் கவிஞ‌ருமான ஹ்யூஸ் ஆல் தெரிவு செய்யப்பட்டு ப்ளாத்தினுடைய கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம்.