Sunday, 19 January 2014

நாசமா நீ போனியா தெருவில் ஒரு வேலை

:)  :)

தலைப்பைப் பார்த்ததும் ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் குஷ்பூவும் ஜனகராஜும் தோன்றும் நகைச்சுவைக் காட்சி உங்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருகிறது என்றால், இந்தப் பதிவின் பேசுபொருளை நெருங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

தற்போது தயாரிப்பில் இருக்கும் ஒரு ஐரோப்பியத் திரைப்படத்தில் பணி புரியும் வாய்ப்பு கடந்த ஆண்டு எனக்குக் கிடைத்தது. பல ஹொலிவூட் வெற்றிப் படங்களின் வெளியீட்டுரிமையைக் கொண்டுள்ள ஒரு ஜேர்மனியப் பெருநிறுவனத்தால் தயாரிக்கப்படும் படம். ஆங்கிலம், டச்சு ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்படும் அந்தத் திரைப்படத்தில் கொஞ்சம் தமிழும் வருகிறது. இதில் மொழிபெயர்ப்பாளனாகவும் நடிகர்களின் வசனப் பயிற்றுவிப்பாளனாகவும் பணியாற்றிய அனுபவம் பற்றியது தான் இந்தப் பதிவு. என்றாலும், முதலில் நாம் சற்றே 'அண்ணாமலை' படக்காட்சிக்குப் போய் வரலாம்.

குறித்த அந்தக் காட்சியில், நேசமணி பொன்னையா தெரு - NESAMANI PONNIAH STREET என்பதை 'நாசமா நீ போனியா ஸ்ட்ரீட்' என்று வாசித்து முகவரி கேட்டு வரும் குஷ்பூவை குழப்புவார் ஜனகராஜ்.

இப்படி ஆங்கிலத்தில் எழுதப்படும் நம்மூர்ப் பெயர்களை நாங்கள் தான் இப்போது புதிதாகச் சத்திர சிகிச்சை செய்து சிதைக்கத் தொடங்கினோம் என்று இல்லை. இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பல ஊர்ப் பெயர்களின் ஆங்கில வடிவத்தை உற்று நோக்கினால் தெரியும் - அந்தக் காலத்தில் எம்மை ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயர்கள் தமது நாவில் புரள மறுத்த உள்நாட்டு வார்த்தைகள் பலவற்றை எப்படிக் குதறிப் பிய்த்து மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று. 

திருவல்லிக்கேணி Triplicane ஆனதன் பின்னணியிலும் திருகோணமலை Trincomalee ஆனதன் பின்னணியிலும் இப்படியான கதைகள் இருக்கக் கூடும்.

அதற்குப் பழிதீர்க்கும் விதமாக இப்போது அவர்களது பாஷையை எங்கள் நாக்குகளில் இஷ்டப்படி உருட்டிப் பந்தாடுகிறோம் என்பது வேறு விடயம் - உதாரணத்துக்கு Lawyers -  வக்கீல்களை 'லாயர்ஸ், லாயர்ஸ்' என்று சொல்லிச் சொல்லி அவர்கள் எல்லாம் பிறவிப் பொய்யர்கள் (Liars) என்று உலகுக்கு உணர்த்திய மொழிப்புரட்சி அல்லது பிறழ்ச்சி வேறு எந்த தேசத்தில் நடந்திருக்கிறது, சொல்லுங்கள் பார்க்கலாம்? :)

தற்காலத்தில் தமிழர்களின் ஃபேஸ்புக் அரட்டைகளிலும் கைபேசிக் குறுஞ்செய்திகளிலும் 'தமிங்கிலத்' திமிங்கிலத்திடம் (Taminglish) சிக்கி தமிழ் படும் பாடு தனியாகப் பேசப்பட வேண்டிய ஒன்று.

சரி, விடயத்துக்கு வருவோம். 

'நேசமணி பொன்னையா தெரு' - நாசமா நீ போனியா தெருவாக வாசிக்கப்படுவதை ஒரு தடவை, இரண்டு தடவை என்று இல்லாமல் இடையறாமல் கேட்க நேர்வது போன்றவொரு அசம்பாவிதம் உங்களுக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அதுவும், சோற்றுக்கு ஆசைப்பட்ட சுண்டலி தானாக வந்து தலையைப் பொறியில் வைத்ததுபோல, நீங்களாக விரும்பிப்போய் அப்படி ஒரு சூழலுக்குள் சிக்கிக் கொண்டால் எப்படி இருக்கும்?


மேற்சொன்ன ஐரோப்பியத் திரைப்படத்தில் எனக்கு விதிக்கப்பட்ட வேலை கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. கதையின் நாயகன் இலங்கையில் இருந்து வந்த தமிழ் இளைஞன். இதில் வருகின்ற மற்றொரு பாத்திரத்துக்கு கதையின் படி அறவே ஆங்கிலமோ டச்சோ தெரியாது. எனவே அவர் வருகின்ற காட்சிகளில் உள்ள வசனங்கள் அனைத்தும் தமிழிலேயே இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.

நகைச்சுவையை மையமாகக் கொண்ட ஒரு வணிகப்படம் இது. ஜேர்மனியில் பெஸ்ட் செல்லராக பல லட்சம் பிரதிகள் விற்ற நாவலின் கதையைப் படமாக்குகிறார்கள்.

முன்பு சொன்னதைப் போல இது ஐரோப்பியப் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்றபடியால், தமிழ் வசனங்களை மிகச் சொற்பமாகவும், அந்தச் சொற்ப வசனங்களைச் சுருக்கமாகவும் வைத்திருந்தார்கள்.

எனக்கு வழங்கப்பட்ட இரண்டு பிரதான பணிகளில் முதலாவது ஆங்கிலத்தில் உள்ள அந்தச் சொற்ப வசனங்களைத் தமிழ்ப்படுத்துவது. அதில் பெரிதாகச் சிக்கல்கள் கிடையாது. இரண்டாவது வேலை இடியப்பத்தை இழை பிரித்து எடுப்பது போன்றது. 

காரணம் படத்தில் தமிழர்களாக வருகின்ற எவரும் நிஜத்தில் தமிழர்கள் கிடையாது; அவர்களுக்குத் தமிழ் அறவே தெரியாதுங் கூட. இங்கிலாந்தில் வதிகின்ற (வட) இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய வம்சாவளி நடிகர்கள் இந்த வேடங்களை ஏற்றிருந்தார்கள். தமிழ் பேசி நடிப்பதற்குத் தமிழராக இருக்க வேண்டியதில்லை என்ற எங்கள் சினிமா பாரம்பரியம் ஐரோப்பா வரை நீண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! மேலைத்தேயப் படங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால் இங்கு வசனங்கள் 'டப்' செய்யப்படுவதில்லை; லைவ் ரெக்கோர்டிங்தான்.

தமிழ்ப்படுத்தப்பட்ட வசனங்களை திரும்பவும் ஆங்கில எழுத்துக்களில் நடிகர்களுக்கு எழுதிக் கொடுத்து அதைச் சரியாக உச்சரிக்கப் பயிற்றுவிப்பது எனக்கு வழங்கப்பட்ட இரண்டாவது வேலை.

இப்போது புரிந்திருக்கும் என்னுடைய நெருக்கடி என்னவென்று!! மொத்தமாக நான்கு நடிகர்களுக்கு இப்படிப் பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது - படத்தின் நாயகன் உட்பட (நாயகி ஐரோப்பியராய்ப் போய்விட்டது துரதிர்ஷ்டம்! :P).

இது போதாதென்று, தமிழ் வசனப் பயிற்சிக்காக மட்டுப் படுத்தப்பட்ட நேரத்தையே ஒதுக்கியிருந்தார்கள்.

வசனங்களின் மொழிபெயர்ப்பை ஒரு நாளில் முடித்து விட்டேன். நடிகர்களுக்கான பயிற்சியைப் பொறுத்த மட்டில், முதல் சில sessions ஐ நேரிலும் பிறகு ஸ்கைப் மூலமாக தொடர்வதாகவும் திட்டமிடப்பட்டது. 

நடிப்புக் கலை மீது எனக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு. ஒரு கமெரா எங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்ற நினைப்பே இல்லாமல் இயல்பாக வாழ்வின் ஒரு துளியை அதன்முன் நிகழ்த்திக் காட்டுவதற்கு அதீத மனப்பயிற்சி வேண்டும். 

எனவே, எனக்கு வழங்கப்பட்ட வசனப் பயிற்றுவிப்புப் பணியில் அந்த நடிகர்கள் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதை விட அவர்களிடமிருந்து நான் அதிகம் கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் ஆர்வமூட்டுவதாக இருந்தது.

பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒரு நாளில் நான்கு நடிகர்களையும் சந்திப்பதாக ஏற்பாடானது. ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மணி நேரம்.

வசனப் பயிற்றுவிப்புக்கு முன்னதாகப் பீடிகையாகச் சொல்வதற்கென்று சில விடயங்களை மனதில் தொகுத்து வைத்திருந்தேன். (அதுதான் ஹிந்தி முதல் தமிழ், மலையாளம் என்று வகைதொகை இல்லாமல் இந்தியத் திரைப்படங்களைப் பார்த்துக் குவித்திருக்கிறோமே. அவற்றிலிருந்து உருவி உருவாக்கிக் கொண்ட ஐடியாக்கள் சிலவற்றை கொஞ்சம் அவிழ்த்து விடலாம் என்ற ஆர்வம் - ஊரிலே 'முட்டுத் தணிப்பது' என்று சொல்வார்கள் இல்லையா? அந்த அதி ஆர்வக் கோளாறுதான்). 
 

எனது முன் பீடிகை சற்றேறக் குறைய இப்படியாக இருந்தது: ஒரு மொழியின் உச்சரிப்பு முறையை இவ்வளவு குறுகிய காலத்துக்குள் உள்வாங்கித் துல்லியமாக வசனங்களைச் சொல்வது ஏறத்தாழ அசாத்தியமானது. அதிலும் தமிழ், ஒலி நுட்பங்கள் மிகுந்த மொழி. ரா-வண் என்றவொரு ஹிந்தி படத்திலே தமிழராக நடித்திருந்த ஷாருக் கான் சொதப்பு சொதப்பென்று சொதப்பியிருப்பார் (அந்த நேரம் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியாகியிருக்கவில்லை). தமிழுக்குள்ளேயே ஏராளமான வட்டார வழக்குகள் உண்டு. நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள யாழ்ப்பாண வழக்குக்கென்று பிரத்தியேகமான தன்மைகள் உள்ளன. தெனாலி என்றவொரு படத்திலே இந்த வட்டார மொழியில் பேச முயன்று கமல்ஹாசன் தோற்றுப் போயிருந்தார்.. என்றாலும் எங்களால் இயன்றவரை முழுமூச்சுடன் பயிற்சி செய்வோம்.. இப்படியாக..
 

நான்கு நடிகர்களையும் வெவ்வேறு நேரங்களில் சந்திப்பதாக இருந்த படியால் இந்தப் பீடிகை மசாலாவைத் திரும்பத் திரும்ப அரைக்கலாம் என்றும் எண்ணியிருந்தேன்.

படத்தின் நாயகனும் அவரது மச்சானாக வரும் குணச்சித்திர நடிகரும் எனது வயதை ஒத்தவர்கள் (அதாவது இளைஞர்கள்!). அவர்கள் என்னுடைய 'டிப்ஸ்' ஐ ஆர்வமாகக் கேட்டுக்கொண்டார்கள். தங்களுடைய அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். 
 

இருவரும் வசனங்களை வஞ்சகமில்லாமல் எக்குத்தப்பாக உச்சரித்த விதத்தில், வில்லங்கமான வேறு வேறு அர்த்தங்கள் உருவாகி வளர்ந்து கொண்டிருந்தன. தமிழ்மொழிக்கு என்று தன்னுணர்வும் பேசுவதற்கு வாயும் இருந்திருந்தால் அது ஓவென்று குழறி அழ ஆரம்பித்திருக்கும். நானும் அந்தப் பிழைகளைப் பொறுமையாகத் திருத்திக் கொண்டிருந்தேன். 
 

அடுத்ததாகச் சந்தித்தவர் ஒரு மூத்த நடிகர். இவரிடமும் பழைய பல்லவியை இசைக்கலாமென்று ஆரம்பிதேன். தமிழின் வட்டார வழக்குகள் பற்றிச் சொல்லத் தொடங்கி இரண்டாவது வரியைத் தாண்டியிருக்க மாட்டேன். இடைமறித்த அவர், 'தசாவதாரம்' கமல்ஹாசன் போல இடைவிடாமல் பத்து விதமான இங்கிலிஷ் அக்செண்டுகளில் பேசிக் காட்டினார். ஒவ்வொன்றும் இங்கிலாந்தின் வெவ்வேறு பிராந்தியங்களில் பேசப்படும் அக்செண்டுகள் என்றார்.

''இதைத்தானே சொல்ல வருகிறாய்?'' இது அவர்.

நான் மலைத்துப்போய் ஆமாம் என்றேன்.
 

அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசாமல் விஷயத்துக்கு வா என்று அவர் சொல்லாமல் சொல்வது போலிருந்தது.

அதற்குப் பிறகு நேரடியாக வசனப் பயிற்சிக்குள் நுழைந்தாயிற்று. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குபீரென்று சிரிப்பு வருகிற மாதிரி எதிர்பாராத ஏதாவதொன்றைச் சொல்லி விடுவது அவருக்குக் கைவந்த கலை. வீடு சென்று கூகுள் பண்ணிப்பார்த்தபோதுதான் தெரிந்தது அவர் இங்கிலாந்தின் பிரபலமான கொமடியன்களில் ஒருவர் என்று. பல விருதுகள் வாங்கியிருக்கிறார். பிபிசி தொடர்களில் நடித்திருக்கிறார்.
 ஜெஃப் மிர்சா அவரது பெயர்.

இதன் பிறகு சில வகுப்புகள் நடந்தன. ஒவ்வொரு முறையும் அக்கப்போர் தான். வசனங்களை ஓய்வு நேரங்களில் கேட்டுப் பழகுவதற்காக ஒலிக்கோப்புகளாக ஆக்கி அவர்களிடம் கொடுத்திருந்தேன்.
 

படப்பிடிப்பின் பெரும்பகுதி ஸ்விட்சர்லாந்திலும் சில காட்சிகள் கேரளாவிலும் இடம்பெற்றன. தமிழ் வசனக் காட்சிகள் இடம்பெறும்போது தமிழ் அறிந்த ஒருவர் அந்த இடத்தில் இருப்பது அவசியம் என்று வலியுறுத்தியிருந்தேன். பட்ஜெட்டில் இடமிருந்தால் என்னை அழைப்பதாகக் கூறியிருந்தார்கள். அது நடக்கவில்லை. படம் பார்த்தால்தான் தெரியும் - தமிழ் வசனங்கள் என்ன லட்சணத்தில் வந்திருக்கின்றன என்று.