Friday, 30 January 2015

மறைக்கும் திரை: கதைசொல்லிகளின் இன்றைய நெருக்கடி

வெகுஜன தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களுக்கு இன்றைய காலத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மாறுபட்ட, புதிய கதைகளை எப்படி உருவாக்குவது, சொல்லுவது என்பது தான்.
சங்கரின் 'ஐ' படம் பார்த்த பிறகு இந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது.
எல்லா ஆக்ககர்த்தாக்களுக்கும் ஏற்படக் கூடிய ஒரு நெருக்கடி தான் இது.
படைப்பு மனத்தில் எப்போதும் மையச் சரடாக ஒருசில எண்ணங்கள், படிமங்கள் சுழன்றபடியே இருக்கும்.
சாதுரியமான கதைசொல்லிகள் அப்படி ஒரு இழையை எடுத்துக் கொண்டு அதன்மீது வெவ்வேறு வண்ணங்களையும் கலவைகளும் பூசிப் பூசிப் புதிது புனைய முனைவார்கள்.
வெற்றிமாறனின் 'பொல்லாதவ'னும் 'ஆடுகள'மும் நல்ல உதாரணங்கள். இரண்டுமே பெருவெற்றி பெற்ற படங்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இரண்டு படங்களதும் மையக்கதை-கரு ஒன்று தான். 'பொல்லாதவ'னில் வந்த உந்துருளி (மோட்டார் சைக்கிள்) 'ஆடுகள'த்தில் சேவலாக மாற்றப் பட்டிருக்கும். பொல்லாதவனின் தடயம் சற்றும் தெரியாதபடி ஆடுகளத்தின் கதைச்சூழல், களம், பேசுமொழி முதலானவை நகரத்தில் இருந்து கிராமத்துக்கு மாற்றப்பட்டிருக்கும். இந்த ரசவாத வித்தையைச் செய்வதற்கு அநாயசமான திறன் வேண்டும்.
ஆனால், இதே செயலை ஓர் எல்லையைத் தாண்டி மிதமிஞ்சிச் செய்யப் போனால் அந்தப் படங்கள் முன்னைய படங்களின் கார்ட்டூன் நகல்களாக caricature ஆக எஞ்சிவிடக் கூடிய அபாயம் உண்டு.
'நாயகன்', 'தளபதி' எடுத்த பிறகு மணிரத்தினம் 'ராவணன்' எடுக்கப் போனது அத்தகைய எத்தனம் என்றே எனக்குப் பட்டது.
கதைக்கரு என்று பார்க்கப் போனால் சங்கர் இதுவரை எடுத்த படங்களில் பெரும்பாலானவற்றை இரண்டு வகைப்பாடுகளுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கிறேன்.
1) தன்னைவிட ஏதோ ஒரு படிநிலையில் மேலே எட்டாக்கனியாக இருக்கும் பெண் மீது காதலுறும் ஆணும் அவளை அடைவதற்கான அவனுடைய அக-புறப் போராட்டங்களும்: காதலன், அந்நியன், ஐ, boys, எந்திரன்
2) ஊழல் கட்டமைப்பு மீதான நடுத்தர வர்க்க மனிதனின் கோபம்: ஜெண்டில்மன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி
வாழ்க்கையின் சுழற்சியில் இரண்டு மனிதர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நண்பனாகவும் எதிரியாகவும் உணர்ந்து கொள்ள முடியும் என்ற சுவாரசியமான அகமுரணை எடுத்துக் கொண்டு மணிரத்னம் புனைந்தெடுத்த கதைகளின் பட்டியல் நீளமானது:
அக்கினி நட்சத்திரம், தளபதி, இருவர், ராவணன், கடல், ஆயுத எழுத்து
சமூக அடுக்கில் கீழே இருக்கும் ஒருவன், நிர்ணயிக்கப்பட்ட விதிகளை உடைத்து மேலே வருவது என்ற கருவை வைத்து எடுக்கப்பட்ட படங்கள்:
நாயகன், தளபதி, ராவணன், குரு
இப்போது எழுந்திருக்கும் புதிய அலையில் இளம் இயக்குனர்கள் கொஞ்சம் வித்தியாசமான கதைகளோடு அறிமுகமாகிறார்கள். ஆனால் நின்று நிலைப்பதற்கு அவர்களும் இதே சவாலை எதிர்கொண்டாக வேண்டும்.

எழுநா வெளியீடுகள் - யுகபுராணம் பற்றிய சிறுகுறிப்பு

எழுநா வெளியீடாக வந்துள்ள 10 நூல்களின் அறிமுக நிகழ்வு கடந்த சனிக்கிழமை லண்டன் ஈஸ்ட் ஹாமில் நடந்தது. அறிமுக உரைகளில் கேட்டவற்றை வைத்துக்கொண்டு பத்து நூல்களும் முக்கியமானவை என்றே ஊகிக்க முடிகிறது. ஆக்கபூர்வமானதொரு செயற்பாடு. அறிமுகப்படுத்தப்பட்ட நூல்களில் சில விற்பனைக்கு இருக்கவில்லை. நான் கீழ்க்கண்ட நூல்களை வாங்கி வந்தேன்:
நிலாந்தனின் 'யுகபுராணம்'
தீபச்செல்வனின் 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்'
முனைவர் ஜெ.அரங்கராஜ் தொகுத்திருக்கும் ' சுவாமி ஞானப்பிரகாசரின் பண்டைத் தமிழர்' 
தி.த.சரவணமுத்துப்பிள்ளை இயற்றிய 'தமிழ்ப்பாஷை என்னும் தமிழியல் ஆய்வும் தத்தைவிடு தூது முதலான ஏனைய பிரபந்தங்களும்'
பரம்சோதி தங்கேஸ் எழுதிய 'யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்'இவற்றில் 'யுகபுராண'த்தை வரும் வழியில் ஒருமுறை முழுவதுமாக வாசித்து விட்டேன். பூர்விகச் சங்கேதங்களின் வழி சொல்லப்பட்டிருக்கும் இற்றைத் துயரம் - நந்திக்கடல் அவலத்தின் பின்பாக எழுதப்பட்ட கவிதைச் சாட்சியம் என்றும் சொல்லலாம். இந்த 40 பக்க நூலில் 27 பக்கங்களை மாத்திரமே கவிதைகள் எடுத்துக் கொண்டுள்ளன. கவிதைகளில் விவரிக்கப்படும் வாதையின் கனம் போதாதென்று புத்தகத்தின் பக்கங்களிலும் கனம் ஏற்றுவான் ஏன் என்று பதிப்பாளர்கள் நினைத்திருக்கக் கூடுமோ என்று தோன்றியது. சான்றாகச் சில வரிகள்:
'பற்றியெரிந்தது பனங்கூடல்
பாடாதே பறந்தது
கொட்டைப்பாக்குக் குருவி.
காடு புகைந்தது.
காட்டாறு
பாலியம்மன் காலடியிற்
பழிகிடந்தது
தொட்டாச்சிணுங்கி முட்களிற்பட்டுக்
குற்றுயிரானது வன்னியன் கனவு..'
'அது ஒரு யுகமுடிவு
பருவம் தப்பிப் பெய்தது மழை
முறைதவறிப் புணர்ந்தனர் மாந்தர்'
'மரணம்
பதுங்குகுழியின் படிக்கட்டில்
ஒரு கடன்காரனைப் போல காத்திருந்தது'
'வழி நெடுக
தலைப்பிள்ளைகளின்
ரத்தம்
காற்றைக் கிழித்தது
பீரங்கி
கடலைக் குடித்தது
நரகத்தீ
வானில்
மரணப் பட்டமென
அசையும்
வேவு விமானம்'
தீபச்செல்வனின் 'கிளிநொச்சி'யை வாசிக்கத் தொடங்கிப் பாதி வழி கடந்திருக்கிறேன். நெஞ்சில் தொற்றும் பிழிதல் உணர்வு அகலாமல் படிந்துவிடக் கூடுமோ என்ற அச்சத்துடன்.
(ஜனவரி 26, 2015 அன்று ஃபேஸ்புக்கில் பதிந்தது)

நெகிழ்ந்த கணம்

நேற்று மாலை நண்பர் ஒருவருடன் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டவாறே மேற்கு லண்டனிலிருந்து கிழக்கு லண்டனுக்கு தொடரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.
பேசியவற்றில் பெரும்பகுதி தமிழிலும் அவ்வப்போது கருத்துப் பரிமாற்றத்துக்குத் தோதென்று பட்டபோது சிற்சில வசனங்கள் ஆங்கிலத்திலுமாக உரையாடல் தொடர்ந்தது.
தொடரூந்து நிலக்கீழ் பாதையில் (underground) நுழைந்த பிறகு தொலைபேசிச் சமிக்ஞை கிடைக்காமல் தொடர்பறுந்து போனது. பேசிக்கொண்டு போன நேரம் அருகில் யார் எவர் இருக்கிறார் என்று எதையும் நான் கவனித்திருக்கவில்லை. தொலைபேசியை அணைத்து விட்டுச் சாவகாசமாகச் சாய்ந்து அமரப் போனபோது, அருகிலிருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி - அவருக்கு 60-65 வயது இருக்கும் - குறுக்கிட்டார்:
'மன்னிக்கவும், நீங்கள் இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்த பாஷை என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?' என்று வினவினார்.
'அது தமிழ்; எனது தாய்மொழி' என்று சிரித்தபடி பதில் தந்தேன்.
அவரும் மிகுந்த பூரிப்புடன் 'நான் அப்படித்தான் ஊகித்தேன்.. Your language is very musical' (இந்த வாக்கியத்தை எப்படி தமிழ்ப்படுத்துவது?) என்றார்.
'நீ அவ்வப்போது ஆங்கிலத்தையும் சரளமாகக் கலந்து பேசியது கேட்க அலாதியாக இருந்தது' என்றார்.
அவரோடு கொஞ்ச நேரம் பேச்சுக் கொடுத்தபோது சில விஷயங்கள் தெரிந்தது. அவர் ஒரு மருத்துவர். 38 ஆண்டு காலச் சேவையின் பிறகு தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். மருத்துவ மாணவியாக இருந்த நேரம் பெங்களூரில் 6 மாதம் பணிபுரிந்திருக்கிறார். தமிழகம் பூராவும் பயணித்திருக்கிறேன் என்றார் பெருமிதத்தோடு.
நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்பதை அறிந்தபோது, சென்ற மாதம்தான் தனது மகள் யாழ்ப்பாணம் வரை சென்று வந்ததாகச் சொன்னார்.
"உங்களுக்கென்று வளமான, நெடியதொரு பாரம்பரியம், வரலாறு இருக்கிறது. உலகின் அந்தப் பகுதி எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று" என்றார்.
எல்லாவற்றையும் விட தான் மிஸ் பண்ணுகிற ஒன்று இருக்கிறது என்று சொன்னார்: 'நான் தென்னிந்தியாவில் இருந்தபோது தமிழகத்தின் ஏதோ ஒரு ஊரில் 5 ரூபாய்க்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டேன். இங்கிருக்கிற எத்தனையோ தென்னிந்திய ரெஸ்டோரண்டுகளில் சாப்பிட்டு விட்டேன். அந்த மசால் தோசைக்கு இணையாக இன்று வரை கண்டதில்லை' என்றார். :)

(ஜனவரி 25, 2015 ஃபேஸ்புக்கில் பதிந்தது)

மௌன விழித்துளிகள் - ஒரு குறிப்பு

பார்த்துக் கொண்டிருப்பது ஒரு திரைப்படம் என்ற உணர்வு தோன்றாமல் ஒரு காட்சியோடு நாம் ஒன்றிப்போய் விட முடிகிறது என்றால் அதுவே அந்தப் படைப்பின் வெற்றி. அண்மையில் இளங்கோ ராமின் 'மௌன விழித்துளிகள்' குறும்படம் பார்த்தேன். படத்தின் முடிவில் இந்த எண்ணம்தான் தோன்றியது.
அதிகம் பின்னல்கள் இல்லாத, எளிமையான - அதேநேரம் ஆழமான - ஒரு கதையை உணர்வைத் தொடும்படி பன்னிரெண்டு நிமிடப் படமாக்கியிருக்கிறார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு முடிவுக்கு வந்த யுத்தத்தில் இளங்கோ ராமின் படம் சித்தரிப்பதைப் போன்ற எண்ணற்ற கொடுங்கதைகள் நிகழ்ந்திருக்கும். இந்தக் கதைகளைத் தூர இருந்து கேட்டு, ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலை வயப்பட்டவர்களாய் குமைவும் குற்ற உணர்வும் அடைந்திருக்கிறோம். இந்த மௌனத்தின் சுமையை, உறுத்தலை ஒரு கலைஞனால் இப்படித்தான் பதிவு செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

இந்தக் குறும்படத்தில் நெகிழ்ச்சி தரும் இன்னொரு விடயம் உண்டு.
இனம், மதம், மொழி, சாதி முதலான எல்லா அடையாளங்களும் காலம், சூழல் சார்ந்து உருவாக்கப்பட்டவை, அடிப்படையில் எதுவித சாரமுமற்றவை என்ற உணர்வு எனக்குண்டு. சிங்களப் பேரினவாதத்தின் நசுக்கலில் 'நான் தமிழன்' என்ற உணர்வு ஒருவரிடத்தில் வலுப்பெறக் கூடும். வெள்ளை நிறவெறி மேலாதிக்கத்தின் கீழ் 'நான் கறுப்பன்' என்ற அடையாளத்தை முன்னிறுத்திக் கொள்ள விழைவது இயல்பானது.
ஆனால், சூழலின் நிர்ப்பந்தங்கள் மறைந்தால் இந்த அடையாளங்கள் கடக்கப்படக் கூடியவை; களைந்துவிடக் கூடியவை என்றே நம்புகிறேன்.
'மௌன விழித்துளிக'ளில் நடித்திருக்கும் கலைஞர்கள் சிங்களவர்கள் என்பதை படத்தின் முடிவில் எழுத்தோட்டத்தின் மூலம் அறிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களில் பெரும்பாலானவர்களும் சிங்களவர்களே.
ஆனால் தமிழில் உரையாடல் வெளிப்படும் விதம் எல்லாம் கச்சிதமாக அமைந்திருக்கிறது. தொழில்நுட்ப நேர்த்தி அத்தனை பூரணமாக இருப்பதே படத்தின் தொழிநுட்பம் பற்றி யோசிக்கத் தோன்றாமல் இருப்பதற்குக் காரணம் என்றும் பட்டது.
விரைவில் இளங்கோ ராம் முழுநீளத் திரைப்படமொன்றைத் தர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

Tuesday, 30 December 2014

Ven Megame | வெண்மேகமே : Sri Shyamalangan Features Haricharan Seshadri


"அருவிகளின் மொழி பேசிடும்
அவள் இதழின் மணி வாசகம்"

CREDITS
Melody and Arrangement : Sri Shyamalangan
Vocals : Haricharan Seshadri
Lyrics : Thava Sajitharan

Monday, 29 December 2014

என்றார் பிரான்


அந்தி வானத்தில் மேகக் கூட்டங்கள் சலனமின்றி அசைந்து செல்வதைப் பார்த்தபடி உப்பரிகையில் நின்று கொண்டிருந்தாள் கோசல நாட்டு அரசி மல்லிகா. அந்தக் காட்சியில் மனம் ஒன்றி நின்றதில் மன்னனும் தனது துணைவனுமான பசேனதி வந்திருந்ததை அவள் கவனிக்கவில்லை. அரசனும் அரசியும் புத்த பிரானின் மாணாக்கர்கள்.
மல்லிகாவிடம் வந்த மன்னன் கூறினான்:
"அரசி, இன்று தியானத்தில் இருந்தபோது மனதில் ஒரு கேள்வி உதித்தது. கேட்கட்டுமா?"
"கேளுங்கள் அரசே"
"இந்த உலகில் நீ யாரை அதிகம் நேசிக்கிறாய்"
"இதில் என்ன சந்தேகம்.. தங்களைத்தான்"
"இந்தப் பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன்"
"மன்னவரே, நீங்கள் அனுமதித்தால் நான் வேறொரு பதிலை - அதிகம் உண்மையுள்ள பதிலைக் கூறுவேன்" என்றாள் மல்லிகா
"சொல் அரசி"
"இந்த உலகில் நான் அதிகம் நேசிக்கும் ஆள் நான் தான்" என்றாள் மல்லிகா.
மன்னனுக்குச் சற்றே அதிர்ச்சி.
"எனக்குப் புரியவில்லை.. கொஞ்சம் விளக்கிச் சொல்" என்றான் மன்னன்.
"மன்னவா, நான் என்னை அதிகம் நேசிக்கிறேன். நான் நேசிக்கிற எனது இந்த பிம்பத்துக்கு மகிழ்ச்சி சேர்ப்பவராக இருப்பதால் தங்களையும் நேசிக்கிறேன்" என்றாள் அரசி.
பசேனதி மேலும் விளக்கச் சொல்லிக் கேட்டான்.
"மன்னவரே, இந்த உலகில் தாங்கள் அதிகம் விரும்புவது யாரை?" என்று கேட்டாள் அரசி.
"உன்னைத்தான்" என்று பலத்துச் சிரித்தபடி சொன்னான் அரசன்.
"சரி, நான் இன்னொரு ஆடவனை நேசிக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம்.. நீங்கள் என்ன செய்வீர்கள்?"
மன்னனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.. குழம்பிப் போனான்..
"அது.. அது.."
"ஆத்திர மிகுதியால் எனது தலையைக் கொய்துவிடும் படிக்கு ஆணையிடுவீர்கள், இல்லையா?"
"நீ தந்திரமாக மடக்குகிறாய் என்னை.." என்றான் அரசன், சிரமப்பட்டுப் புன்னகைத்தபடி.
"அது உண்மையா இல்லையா?" அரசி கேட்டாள்
"ம்ம்.."
"சொல்லுங்கள் அரசே" மல்லிகா உந்திக் கேட்டாள்.
சில நொடி கடந்த மௌனத்துக்குப் பிறகு மன்னன் பதில் அளித்தான்.
"நீ சொல்வது சரியென்று தான் படுகிறது"
"எனவே நான் சொல்வது சரிதானே - நீங்கள் நேசிப்பது உங்களுக்குப் பிடித்தமான எனது பிம்பத்தையன்றி என்னையல்ல.. இல்லையா? உங்களுக்குப் பிடித்தமானதை நேசிப்பது உங்களை நேசிப்பது தானே?"
மன்னன் உடன்பட்டான்.
அடுத்த முறை இருவரும் புத்த பிரானைச் சந்தித்தபோது தங்களுக்கிடையில் நடந்த சம்பாஷணை குறித்து பகவனிடம் கூறினார்கள். மோனமாகப் புன்னகைத்தபடி "சாது.. சாது.. சாது" (நன்றே சொன்னீர்கள்) என்றார் பிரான்.


Saturday, 22 November 2014

ஒரு துறையாக ஈழத்து சினிமா வளரவில்லை – லெனின் எம். சிவம்


தொடர்புடைய மற்றொரு பதிவு

A Gun and A Ring திரைப்படத்தின் இயக்குனர் லெனின் எம் சிவத்துடனான இந்த நேர்காணல் லண்டனில் வைத்துப் பெறப்பட்ட்து. லண்டனில் சனக்கூட்டம் நிறைந்த இரண்டு அரங்குகளில் A Gun and A Ring படம் திரையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.


கேள்வி:

தமிழ் சினிமா என்றில்லை.. பொதுவாகத் தமிழ்ப் படைப்பு வெளி என்று எடுத்துக் கொண்டாலே, பலரும் பேசத் தயங்குகின்ற பல விடயங்களை இந்தத் திரைப்படத்தில்தொட்டிருக்கிறீர்கள்.. படத்தின் கதைக்களங்கள் அனைத்திலும் பேசாப் பொருளைப் பேசத் துணிகிற ஒரு பண்பு வெளிப்படுகிறது (பட விமர்சனம் பார்க்க). இது பிரக்ஞாபூர்வமாக நடந்தஒன்றா? அல்லது கதையை எழுதிச் செல்லும்போது தானாக அமைந்த ஒன்றா? இந்தக் கதை இத்தனை அடுக்குகளோடு எப்படி உருவானது?

லெனின் எம். சிவம்:

இது கதை எழுதிச் செல்லும்போது தானாக அமைந்த ஒன்றுதான்.

(சனல் 4 இன்) 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தைப் பார்த்த வேளை, அது என்னை வெகுவாகப் பாதித்தது. யுத்தத்தின் போது ஏகப்பட்ட அட்டூழியங்கள் நிகழ்ந்தன என்பதை அறிந்திருந்தேன். ஆனால் அதைக் காட்சிகளாகப் பார்த்தபோது சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்தேன்யுத்தம் இவ்வளவு மிலேச்சத்தனமானதா என்று எண்ண வைத்தன அந்தக் காட்சிகள். இந்த யுத்தத்தோடு வளர்ந்த ஒருவனாக இருந்து கொண்டு, கடந்த முப்பது ஆண்டுகளாக இதை நான் உணராததையிட்டு வெட்கப்பட்டேன். ஏதோவொரு வகையில் இதற்கு நானும் பொறுப்புக் கூற வேண்டியவன் என்பதாக உணர்ந்தேன்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்த கொடுமைகளை நினைத்துப் பார்த்தேன். வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பெண்கள்.. தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே செல்லடி வாங்கிய குழந்தை.. தாய் இறந்தது தெரியாமல் தாயின் மார்பில் பால் தேடும் பிள்ளை என்று என்னவிதமான வாழ்க்கையை இந்த யுத்தம் எங்களிடம் முடிவாகத் தந்துவிட்டுப் போயிருக்கிறது என்ற கேள்வி என்னை வெகுவாகப் பாதித்தது.

இந்த யுத்தத்தின் கொடூரத்தையும் எம்மீது அது ஏற்படுத்திய பாதிப்பையும் செல்லவேண்டும் என்று உணர்ந்தேன்.  அதை உண்மையாகச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். 

இவ்வாறு பேசப்படவேண்டிய விடயங்கள் என் மனதில் தோன்றத் தோன்ற உண்டான மனச்சீற்றத்திலிருந்தே இந்தக் கதைக்கரு உருவாக ஆரம்பித்தது.கேள்வி: ஒருவகையில், நான், நீங்கள் உள்ளடங்கலான ஒட்டு மொத்தச் சமூகத்தின் மீதும் முன்வைக்கப்பட்ட ஒரு விமர்சனமாக இந்தப் படத்தைக் கருதலாம் என்று தோன்றுகிறது. இந்தத்திரைப்படம் புலம்பெயர் தமிழர் வாழும் தேசங்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களின் எதிர்வினை என்ன விதமாக இருக்கிறது? திரைப்படத்தினூடாக நீங்கள்முன்வைத்திருக்கும் விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

லெ.சி: 
இதை நான் ஒட்டு மொத்தச் சமூகத்தின் மீதும் முன்வைக்கப்பட்ட ஒரு விமர்சனமாக பார்க்கவில்லை.  உண்மையை அப்படியே பேசவேண்டும் என்றதன் விளைவு அவ்வாறாகத் தோன்றலாம். 

உண்மையில் நான் சற்றுப் பதற்றத்துடன் இருந்தேன்.. டொரொன்டோவில் தான் முதன்முறையாக இதைத் திரையிட்டுக் காட்டினோம்.. பேசப்படப்படாத பல விடயங்களை இந்தப் படம் பேசியபடியால் எம்மக்கள் மத்தியில் எவ்வாறான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்று சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் படத்துக்குக் கிடைத்த எதிர்வினை அற்புதமானது. என்னைப் பாதித்திருந்த உணர்ச்சிகள் பார்வையாளர்களையும் பாதித்திருந்தன என்பதைக் கண்டேன். நான் நினைக்காத அளவுக்கு வரவேற்புக் கிட்டியிருந்தது.


கேள்வி: கதையின் நுட்பமான இழைகளை பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்களோ என்ற ஐயத்தாலும் அவநம்பிக்கையாலும் அட்சரம் அட்சரமாகக் கதையை விரித்துச் சொல்கிற ஒருபண்பையே நாம் அறிந்த தமிழ் சினிமாவில் கண்டிருக்கிறோம். இந்தப் படத்தில் அப்படி இல்லை. இதிலுள்ள ஆறு விதமான கதைக்களங்களிலும் பார்வையாளர்கள் தாமாக மீதிக்கதையை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. படத்தைப் பார்ப்பவர்கள் கதையை முழுதுமாகப் புரிந்து கொள்வார்களா என்ற தயக்கம் உங்களுக்கு இருந்ததா?

லெ.சி:

மிக நல்ல கேள்வி. உண்மையாகவே எனக்கு ஒருவித தயக்கம் இருந்தது. திரும்பத் திரும்பத் தென்னிந்திய சினிமாவுக்குள் மூழ்குபவர்கள் நாங்கள். வாழைப்பழத்தை உரித்துத் தொண்டைக்குள் திணிப்பதைப் போல கதை சொல்லும் வழக்கம்தான் பெரும்பாலான தென்னிந்திய படங்களில் இருக்கிறது.  அப்படி கதைசொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கதையை வேண்டுமென்று சிக்கலானதாக ஆக்கவில்லை. இதன் தேவை அப்படி. ஓரிரு விடயங்கள் பார்வையாளர்களின் கவனத்திலிருந்து தப்பினாலும், ஒட்டுமொத்தக் கதையை உள்வாங்குவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது சிலவேளை சிக்கலானதாக இருக்கலாம். நமது மக்களுக்கு இது அந்நியமான ஒன்றாக இருக்காது. எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அது நமது புறங்கையைப் பார்ப்பது போலவே இருக்கும். இது நமது கதை நமது களம். அத்தோடு எப்போதும் பார்வையாளர்களை மதிப்பவன் நான். நான் ஒருவன் தான் புத்திசாதுர்யமானவன் என்று நினைப்பதில்லை.

கேள்வி:

துவக்கு, மோதிரம் என்ற இரண்டு பொருள்களை மையச் சரடாக வைத்துக் கொண்டு ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகத் தோன்றும் நிகழ்வுகளை இணைத்துக் கதைசொல்லியிருக்கிறீர்கள். 'சுவாரசியம்' என்ற அம்சம் தான் இதில் பிரதானமானதாகப் படுகிறது. இந்த ஸ்கிரிப்டை உருவாக்கிய பின்னணியைச் சொல்லுங்கள்..?

லெ.சி

கதையின் 'தீம்' எனக்குத் தெரிந்திருந்தது. அதைச் சார்ந்த கதாப்பாத்திரங்கள் உருவாகத் தொடங்கின. அவர்களின் கதைகளைச் சொல்லிக் கொண்டு போகும் போது அதற்குள் ஒரு மோதிரம் வரத் தொடங்கியது. பிறகு ஒரு துவக்கு. இரண்டும் தனித்தனியாக உருவானவை. இவற்றை முதலில் தொடுத்து இணைக்கத் தொடங்கினேன். பிறகு கதாப்பாத்திரங்களை ஒன்றோடு ஒன்று தொடுத்தேன்.கேள்வி:

திரைக்கதை அமைக்கும்போது அதனது சுவாரசியத்தன்மை எவ்வளவு தூரம் இயல்பாக, organic ஆக வருகிறது? அல்லது அதைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு தூரம் பாடுபடவேண்டியிருக்கிறது?

லெ.சி: 
என்னைப் பொறுத்தவரை கதையில் சுவாரசியம் என்பது முக்கியமானது. எனது முதல் திரைப்படமான 1999 ஐப் பார்த்தீர்கள் என்றாலும் அந்த அம்சம் அதில் இருக்கும். திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தை நீங்கள் நன்றாக அறிந்து கொண்டீர்கள் என்றால் பிறகு சுவாரசியத்தன்மை organic ஆக உருவாகும். இந்தப் படத்தில் 'இரும்பன்' பாத்திரத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அவர் இனியில்லையென்ற ஒரு பிறவிக் கொலைகாரர். அப்படி இருந்து விட்டு பிறகு புலம்பெயர் தேசத்தில் தனது இயல்புக்கு ஒத்து வராத ஒரு வாழ்க்கையை 20 ஆண்டுகளாக நடத்திக் கொண்டு போவார். அப்படி இருக்கும்போது அவரது மகன் இறந்து விடுகிறான். மனைவி மனம் குழம்பிப் போகிறார். இப்படியான ஒரு புள்ளியில், அவருக்கு விடுதலை கொடுப்பது போல அவரது கடந்த காலத்திலிருந்து ஒரு மனிதன் வருகிறான். எனவே அந்த தீம், அந்தப் பாத்திரத்தின் களம் தெரிந்ததும், பிறகு கதையின் நிகழ்வுகளை இணைக்கலாம். சில பகுதிகள் தொய்வாகத் தென்பட்டால், அவற்றை சுவாரசியமாக்குவதற்கு சில சம்பவங்களை உருவாக்க வேண்டி வரலாம்.

கேள்வி:

இந்தப் படத்தின் உரையாடல்கள் (Dialogues) பற்றிக் கொஞ்சம் பேசலாம். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு சார்ந்த இயல்பான ஒரு திரைமொழி இதில் இருக்கிறது. இதேவேளை, தற்போது திரைப்பட முயற்சிகளில் ஈடுபடும் ஈழத்தவர்களில் ஒரு சாரார், தமிழகப் பார்வையாளர்களுக்குப் புரியக் கூடிய வகையில் வசனங்கள் அமைக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார்கள். இது குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன?

லெ.சி
இந்த மொழிப் பிரச்சினையை தேவையற்ற ஒரு குழப்பமாகத்தான் நான் பார்க்கிறேன். ஏனோ தெரியாது இது மிகப்பெரிய குழப்பமாக ஈழத்துத் திரைப்படக் கலைஞர்களிடம் இருக்கின்றது.  என்னைப்பொறுத்தவரை எனது கதாபாத்திரம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தால் அவர் யாழ்ப்பாண தமிழில் பேசினாலே அது சரியாக இருக்கும். இதற்க்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது.  சிலர் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு எமது தமிழ் புரியாது என்றும் அதற்காக கதாபாத்திரங்களை தாம் தென்னிந்திய திரைப்படத் தமிழில் பேசவைக்கிறோம் என்கிறார்கள்.  என்னைப்பொறுத்தவரை இதற்காக எனது கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மையை நான் இழக்கத் தயாரில்லை.

கேள்வி: ஈழத் தமிழர்களின் திரைப்பட உருவாக்க முயற்சிகள் என்று வருகிறபோது, அதில் உள்ள மிக முக்கியமான சவால் என்ன?

லெ.சி:
எமக்கென்று ஒரு துறைஇண்டஸ்ட்ரி இல்லாதது தான் பிரதானமான பிரச்சனை. ஒரு திரைப்படம் பலரது கூட்டு உழைப்பின் மூலம் உருவாகிறது. இயக்குனராக எனது வகிபாகம் பிரதானமானதாக இருக்கலாம். ஆனால் எழுத்துப் பிரதியை எழுதுவதோடு எனது தனிப்பட்ட வேலை முடிந்து விடுகிறது. மீதி வேலைகள் அனைத்திலும் ஏனையவர்களை இணைத்துக் கொண்டே செய்ய வேண்டியிருக்கும். எனவே என்னுடைய எண்ணங்கள், அனுபவம் எல்லாவற்றுக்கும் பொருந்தி வருகிற ஐந்தாறு பேர் கூட வேலை செய்கிறபோதே அதை முன்னகர்த்திக் கொண்டு போக முடியும். திரைப்படத் துறை என்று ஒன்றிருந்தால் அப்படியானவர்களை இலகுவாகக் கண்டெடுக்க முடியும்நடிகர்களாயிருந்தால் என்ன, தொழினுட்பவியலாளர்களாயிருந்தால் என்ன.. என்னுடைய வேலை இலகுவாகி விடும். நமக்குத் தற்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், இப்படியான ஒரு செயல்திட்டத்தில் பங்கெடுப்பவர்களுக்கு நீங்கள் அதிகப்படியான தூண்டுதலை வழங்க வேண்டியிருக்கிறது. இது தான் கடினமான பகுதி. இண்டஸ்ட்ரி என்றிருந்தால் அவரவர் தத்தமது வேலைகளைக் கவனித்துக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். அப்படியில்லாமல் திரைப்படம் ஒன்றை உருவாக்கும்போது, நீங்கள் அதிகப்படியான பிரயத்தனத்துடன் இயங்க வேண்டியிருக்கிறதுநடிகர் தேர்வு, பிறகு அவர்களுக்கான பயிற்சி, வழிகாட்டுதல் முதலான விடயங்களில்.

(நன்றி: ஞாயிறு தினக்குரல், எதுவரை இணைய இதழ்)